இலங்கை நிலைமைகள் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கவலை
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும், இலங்கை அரசாங்கப் படைகளுக்கும் இடையில் நடக்கும் மோதலில் அகப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலைமை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.
இன்று வெள்ளை மாளிகையில் அவர் ஆற்றிய செய்தி ஊடகங்களுக்கான உரையின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
விடுதலைப்புலிகள் தம்வசம் உள்ள ஆயுதங்களை களைந்து தாம் பிடித்து வைத்திருக்கும் பொதுமக்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறியுள்ள ஒபாமா அவர்கள், அங்குள்ள மனித அவலத்துக்கு தீர்வுகாண இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்.
”விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை கைவிட்டு, தம்வசம் உள்ள மக்களை வெளியேறிச் செல்ல அனுமதிக்க வேண்டும். மக்களை பலவந்தமாக படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதும் மற்றும் அவர்களை மனித கேடயமாக பயன்படுத்துவதும் மிகவும் கண்டிக்கத்தக்கவையாகும். இப்படியான நடவடிக்கைகள் அவற்றைச் செய்வோரை தனிமைப்படுத்த மாத்திரமே உதவும்.” என்றார் ஒபாமா.
அதேவேளை இந்த மனித அவலத்தை ஒழிக்க இலங்கை அரசாங்கமும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார்.
முதலாவதாக பல நூற்றுக்கணக்கான உயிர்களையும், மருத்துவமனைகளையும் பலிகொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை அரசாங்கம் நிறுத்த வேண்டும். மோதல் பகுதியில் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதில்லை என்ற தனது உறுதிமொழியை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும்.
இரண்டாவதாக, மோதல் பகுதியில் அகப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்களது உயிர்களை காப்பாற்றிக் கொள்வதற்கு உதவக்கூடிய உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுக்களை உள்ளே செல்ல அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
அத்துடன், மூன்றாவதாக இந்த மோதலில் இடம்பெயர்ந்துள்ள ஒரு இலட்சத்து தொண்ணூறாயிரம் மக்களுக்கு உதவுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையையும், செஞ்சிலுவைச் சங்கத்தையும் அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.” என்றார் அதிபர் ஒபாமா.
இலங்கை மக்கள் துயருறுகின்ற இந்த வேளையில், அவர்களுக்கு உதவுவதற்கு சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்பட அமெரிக்க தயாராக இருக்கிறது. நாம் இனிமேலும் தாமதிக்கலாம் என்று நான் கருதவில்லை. அங்கு மேலும் மனிதாபிமான அவலங்கள் ஏற்படுவதை தடுப்பதற்கு நாம் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் வந்துள்ளது.” என்றார் ஒபாமா.
”இவற்றுக்கு எல்லாம் அப்பால், இலங்கை மக்கள் எல்லாரையும் அங்கீகரித்து, அவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலான நிரந்தர சமாதனம் ஒன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும்.
அதிகரிக்கின்ற மனித இழப்புகளும், மறுவாழ்வு முகாம்களில் போதுமான வசதிகள் இல்லாமையும், இலங்கையில் மக்கள் எதிர்பார்க்கின்ற அமைதியை பெறுவதை மேலும் கடினமாக்கவே உதவும்.” என்று கூறினார் அமெரிக்க அதிபர் ஒபாமா.
அண்மைய பின்னூட்டங்கள்