இல்லம் > ALL POSTS, இலங்கைத் தமிழர்கள் > யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்


தமிழ், வேறு பல மொழிகளைப் போல பேச்சுத் தமிழ், எழுத்துத் தமிழ் என இருவேறு வடிவங்களைக் கொண்டுள்ளது. எழுத்துத் தமிழ், உலகில் தமிழ் வழங்கும் எல்லாப் பகுதிகளிலும் ஏறத்தாழ ஒன்றுபோலவே, வேறுபாடுகள் அதிகம் இன்றி இருந்தாலும், பேச்சுத் தமிழ், இடத்துக்கிடம் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளுடன் அமைந்திருப்பதை அவதானிக்க முடியும். இத்தகைய வேறுபாட்டுடன் கூடிய மொழி வழக்குகள் வட்டார வழக்குகள் எனப்படுகின்றன. இலங்கையின் வட பகுதியில் பெரும்பான்மையாகத் தமிழர் வாழும் பகுதியான யாழ்ப்பாணப் பகுதியில் பேசப்படும் தமிழே இக்கட்டுரையில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ் எனக் குறிப்பிடப்படுகின்றது.

jaffna2யாழ்ப்பாணத் தமிழர்கள் 100 விழுக்காடு வாழுகின்ற நிலப் பகுதியான யாழ்ப்பாணக் குடாநாடு, தனித்துவமான அம்சங்களுடன் கூடிய பேச்சுத்தமிழ் வழக்கு யாழ்ப்பாணத்தில் உருவானதற்கு, அரசியல் மற்றும் வரலாற்று அம்சங்களே காரணமாகும்.

Purple grapes

எழுத்து

தமிழ் ஒலிகளைக் குறிக்கும் எழுத்துக்களுக்கான உச்சரிப்புகள் இன்னதுதான் என வரையறுக்கப்பட்டு இருந்தாலும், பேச்சுத் தமிழில் அவற்றின் உச்சரிப்புகள் பல வேறுபாடுகளை அடைவதை அவதானிக்கலாம். யாழ்ப்பாணத்துத் தமிழில் இந்த உச்சரிப்புகள் எந்த அளவுக்கு சரியான விதிகளுக்கு அமைய உள்ளன என்பதைக் கருதும்போது கவனத்துக்கு வரும் அம்சங்கள் சில பின்வருமாறு.

யாழ்ப்பாணத்தவர் ழ கரத்தைச் சரியாக உச்சரிப்பதில்லை. இங்கே ழ கரமும், ள கரமும் ஒன்றுபோலவே உச்சரிக்கப்படுகின்றன. வாழை க்கும், வாளை க்கும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் உச்சரிப்பு வேறுபாடு கிடையாது.
யாழ்ப்பாணத்தவர் பேசும்போது ர கர – ற கர, ல கர – ள கர, மற்றும் ன கர – ண கர வேறுபாடுகள் மிகவும் தெளிவாக இருக்கும்.
ற கர மெய் இரட்டித்து வரும்போது யாழ்ப்பாணத்து உச்சரிப்பு தமிழ்நாட்டு உச்சரிப்புடன் ஒத்து அமைவதில்லை. தமிழகத்தில் ற்ற, ற்றி …. என்பன t-ra, t-ri என உச்சரிக்கப்படும்போது, யாழ்ப்பாணத்தில் t-ta, t-ti என உச்சரிக்கப்படுகின்றது.

சொற்கள்

பேச்சுத் தமிழில் சொற்களும் பல விதமான மாற்றங்களுக்கு உள்ளாகின்றன. சில சொற்களைக் குறுக்கி ஒலிப்பதும், சிலவற்றை நீட்டி ஒலிப்பதும், சிலவற்றின் ஒலிகளை மாற்றி ஒலிப்பதும் சாதாரணமாகக் காணக்கூடியதே. எனினும் சொற்களை உச்சரிப்பதில் யாழ்ப்பாணத் தமிழில் ஒப்பீட்டு ரீதியில் மிகக் குறைவான திரிபுகளே இருப்பதாகக் கூறலாம். தமிழ்நாட்டுப் பேச்சுத் தமிழுடன் ஒப்பிட்டு நோக்குவது இதனைப்புரிந்து கொள்ள உதவும். எடுத்துக்காட்டாக:

ன், ம் போன்ற மெய்யெழுத்துக்களில் முடியும் பல சொற்களை உச்சரிக்கும்போது, இந்த எழுத்துக்களை முழுமையாக உச்சரிக்காமல், ஒரு மூக்கொலியுடன் நிறுத்துவது தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படுகின்றது. நான் என்பதை நா. என்றும், மரம் என்பதை மர. என்றும் உச்சரிப்பதைக் காணலாம். நான் என்பதைச் சில சமயங்களில் நானு என்று நீட்டி உச்சரிக்கும் வழக்கமும் உண்டு. யாழ்ப்பாணத்தில் இச் சொற்களை நான், மரம் என்று முழுமையாக உச்சரிப்பார்கள்.
இகர, உகரங்கள் தனியாகவோ, உயிர்மெய்யாகவோ சொல் முதலில் வருகின்றபோது, தமிழ் நாட்டில் பல இடங்களில், அவற்றை முறையே எகர, ஒகரங்களாக உச்சரிப்பார்கள். எடுத்துக்காட்டாக, இடம், எடம் எனவும், குடம், கொடம் எனவும் ஆவதைப் பார்க்கலாம். இந்த உச்சரிப்புத் திரிபும் யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இல்லை.

எனினும் ஒலிகள் திரிபு அடைவது யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் இல்லாதது அல்ல. இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. பல சொற்களில் ற கரம், ட கரமாகத் திரிபு அடைவதுண்டு. ஒன்று என்பது ஒண்டு என்றும், வென்று என்பது வெண்டு என்றும் திரியும். இது போலவே கன்று, பன்றி, தின்று என்பவை முறையே கண்டு, பண்டி, திண்டு என வழங்குவதை அவதானிக்கலாம்.

jaffna4

இலக்கணம்
தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள்

தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள் தொடர்பில் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் அதிக வேறுபாடுகள் இல்லாவிட்டாலும், பல சிறப்பம்சங்களை இங்கே காணலாம். படர்க்கையில், அண்மைச் சுட்டு, சேய்மைச் சுட்டுச் சொற்களுடன் சேர்த்து, முன்னிலைச் சுட்டுச் சொற்களும் (உவன், உது), யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழில் புழங்குகின்றன. இது பண்டைத் தமிழ் வழக்கின் எச்சங்கள் எனக் கருதப்படுகின்றது. இது தவிர, ஆண்பால், பெண்பால் இரண்டிலும் பன்மைப் பெயர்களும் (அவங்கள், அவளவை) பேச்சுத் தமிழில் உள்ளன. இது எழுத்துத் தமிழில் இல்லாத ஒரு பயன்பாடு ஆகும். யாழ்ப்பாணத்தில் புழங்கும், தன்மை, முன்னிலை, படர்க்கைப் பெயர்கள், எழுத்துத் தமிழ்ப் பெயருடன் கீழேயுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
– எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ்
ஒருமை பன்மை ஒருமை பன்மை
தன்மை நான் நாங்கள் நான் நாங்கள், நாங்க
முன்னிலை நீ நீங்கள் நீ நீங்கள், நீங்க
– – நீர் நீர்
படர்க்கை ஆண்பால் (அ.சுட்டு) இவன் – இவன் இவங்கள்
ஆண்பால் (சே.சுட்டு) அவன் – அவன் அவங்கள்
ஆண்பால் (மு.சுட்டு) – – உவன் உவங்கள்
பெண்பால் (அ.சுட்டு) இவள் – இவள் இவளவை
பெண்பால் (சே.சுட்டு) அவள் – அவள் அவளவை
பெண்பால் (மு.ச்சுட்டு) – – உவள் உவளவை
பலர்பால் (அ.சுட்டு) – இவர்கள் இவர் இவையள்
பலர்பால் (சே.சுட்டு) – அவர்கள் அவர் அவையள்
பலர்பால் (மு.ச்சுட்டு) – – உவர் உவையள்
அஃறிணை (அ.சுட்டு) இது இவை இது இதுகள்
அஃறிணை (சே.சுட்டு) அது அவை அது அதுகள்
அஃறிணை (மு.சுட்டு) – – உது உதுகள்

மேலே காணப்படும் முன்னிலைச் சுட்டுப் பெயர்கள் இன்னும் யாழ்ப்பாணத்தில் வழக்கில் உள்ளது .

முன்னிலைச் சுட்டுப் பெயர்களாக, உவன், உவள், உது, உவை, உவடம் (உவ்விடம்), உங்கை (உங்கே), உந்தா போன்ற பல சொற்கள் யாழ்ப்பாணத்தில் புழக்கத்தில் உள்ளன.

jaffna5

வேற்றுமை உருபுகள்

யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் சொற்களுடன் வேற்றுமை உருபுகள் சேரும்போது எழுத்துத் தமிழிலிருந்து வேறுபடுவதை அவதானிக்கலாம். கீழேயுள்ள அட்டவணை இவ் வேறுபாடுகளை எடுத்துக் காட்டுகின்றது.
வேற்றுமை உருபு எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ் குறிப்புகள்
1 – அவன் அவன் –
2 ஐ அவனை அவனை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்
3 ஆல் அவனால் அவனாலை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்
ஓடு அவனோடு அவனோடை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்
4 கு அவனுக்கு அவனுக்கு –
5 இன் அவனின் அவனிலும் –
6 அது அவனது, அவனுடைய அவன்ரை (avanttai) இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்
7 இல் அவனில் அவனிலை இறுதியில் வருவது குற்றியல் ஐகாரம்

Sri Lankan school girls look on during t

இடம், பால், காலம்

இடம், பால், காலம் காட்டும் விகுதிகள் சொற்களுடன் சேரும்போதும் யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழ் பல வேறுபாடுகளைக் காட்டுகின்றது. செய் என்னும் வினைச் சொல்லுடன், மேற்படி விகுதிகள் சேரும்போது உருவாகும் பேச்சுத்தமிழ்ச் சொற்கள் கீழே தரப்படுகின்றன.
விளக்கம் எழுத்துத் தமிழ் பேச்சுத் தமிழ் குறிப்புகள்
இடம் பால் எண் காலம்
தன்மை
தன்மை – ஒருமை இறந்த செய்தேன் செய்தன், செய்தனான் –
தன்மை – ஒருமை நிகழ் செய்கிறேன் செய்யிறன் –
தன்மை – ஒருமை எதிர் செய்வேன் செய்வன் –
தன்மை – பன்மை இறந்த செய்தோம் செய்தம், செய்தனாங்கள் –
தன்மை – பன்மை நிகழ் செய்கிறோம் செய்யிறம் –
தன்மை – பன்மை எதிர் செய்வோம் செய்வம் –
முன்னிலை
முன்னிலை – ஒருமை இறந்த செய்தாய் செய்தா(ய்), செய்தனீ –
முன்னிலை – ஒருமை நிகழ் செய்கிறாய் செய்யிறா(ய்) –
முன்னிலை – ஒருமை எதிர் செய்வாய் செய்வா(ய்) –
முன்னிலை – பன்மை இறந்த செய்தீர்கள் செய்தீங்க, செய்தீங்கள், செய்தனீங்கள் –
முன்னிலை – பன்மை நிகழ் செய்கிறீர்கள் செய்யிறீங்க, செய்யிறீங்கள் –
முன்னிலை – பன்மை எதிர் செய்வீர்கள் செய்வீங்க, செய்வீங்கள் –
முன்னிலை – பன்மை இறந்த செய்தீர் செய்தீர் (மரியாதை ஒருமை)
முன்னிலை – பன்மை நிகழ் செய்கிறீர் செய்யிறீர் (மரியாதை ஒருமை)
முன்னிலை – பன்மை எதிர் செய்வீர் செய்வீர் (மரியாதை ஒருமை)
படர்க்கை, உயர்திணை
படர்க்கை ஆண் ஒருமை இறந்த செய்தான் செய்தான், செய்தவன் –
படர்க்கை ஆண் ஒருமை நிகழ் செய்கிறான் செய்யிறான் –
படர்க்கை ஆண் ஒருமை எதிர் செய்வான் செய்வான் –
படர்க்கை ஆண் பன்மை இறந்த – செய்தாங்கள், செய்தவங்கள் எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை ஆண் பன்மை நிகழ் – செய்யிறாங்கள் எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை ஆண் பன்மை எதிர் – செய்வாங்கள் எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை பெண் ஒருமை இறந்த செய்தாள் செய்தாள், செய்தவள் –
படர்க்கை பெண் ஒருமை நிகழ் செய்கிறாள் செய்யிறாள் –
படர்க்கை பெண் ஒருமை எதிர் செய்வாள் செய்வாள் –
படர்க்கை பெண் பன்மை இறந்த – செய்தாளவை, செய்தவளவை எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை பெண் பன்மை நிகழ் – செய்யிறாளவை எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை பெண் பன்மை எதிர் – செய்வாளவை எழுத்துத் தமிழில் இல்லை
படர்க்கை பலர் – இறந்த செய்தார்கள் செய்தவை, செய்திச்சினம் –
படர்க்கை பலர் – நிகழ் செய்கிறார்கள் செய்யினம் –
படர்க்கை பலர் – எதிர் செய்வார்கள் செய்வினம் –
படர்க்கை, அஃறிணை
படர்க்கை ஒன்றன் – இறந்த செய்தது செய்தது, செய்துது –
படர்க்கை ஒன்றன் – நிகழ் செய்கிறது செய்யிது –
படர்க்கை ஒன்றன் – எதிர் செய்யும் செய்யும் –
படர்க்கை பலவின் – இறந்த செய்தன செய்ததுகள் –
படர்க்கை பலவின் – நிகழ் செய்கின்றன செய்யுதுகள் –
படர்க்கை பலவின் – எதிர் செய்யும் செய்யுங்கள் –

jaffna1

வினைச் சொற்களின் பயன்பாடுகள்

யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் நான்கு வகையான பேச்சு வகைகள் உள்ளன. அவற்றை மரியாதை மிகு பேச்சு வகை, இடைநிலை பேச்சு வகை, சாதாரண பேச்சு வகை, மரியாதை அற்ற பேச்சு வகை என வகைப்படுத்தலாம். இதில் மரியாதை மிகு வகை என்பது “வாருங்கள் அல்லது வாங்கோ”, “சொல்லுங்கள் அல்லது சொல்லுங்கோ” என்று பன்மையாக பேசப்படும் வகையாகும். இடைநிலை பேச்சு வகை என்பது “வாரும்”, “சொல்லும்” என பேசப்படும் வகையாகும். சாதாரண பேச்சு வகை “வா”, “போ”, “இரு” போன்று பேசப்படும் வகையாகும். மரியாதை அற்ற பேச்சு வகை “வாடா”, “சொல்லடா” என மரியாதையற்ற பயன்பாடாகும். இந்த மரியாதை அற்ற சொற்கள் நண்பர்களிடையேயோ, இளைய சகோதரர்களிடம் பெரியவர்களாலோ, குழந்தைகளிடம் பெற்றோராலோ, சிறியவர்களிடம் பெரியவர்களாலோ பயன்படுத்தப்படும். சிறியவர்களாக இருந்தாலும் பெரியவர்கள் அவர்களிடம், “வாங்கோ, சொல்லுங்கோ” போன்ற மரியாதையான சொற்களைப் பயன்படுத்தும் முறையும் உள்ளது. அதேவேளை கோபத்தில் பேசும்போதும் பேசப்படுவதுண்டு. இவற்றில் “இடை நிலை பேச்சு வகை” யாழ்ப்பாணத் தமிழரிடம் மட்டுமே காணப்படும் ஒரு தனிச்சிறப்பாகும். இந்த இடைநிலை பேச்சு வகை, தமிழ்நாட்டு பழங்கால அரசத் திரைப்படங்களில் காணப்பட்டாலும் தற்போது பெரும்பாலும் மறைந்து விட்ட நிலை என்றே கொள்ளக்கூடியதாக உள்ளது.

jaffna5இந்த இடைநிலை பேச்சு வகை நண்பர்களிடையேயும், சமவயதினரிடையேயுமே அதிக வழக்கில் உள்ளது. சிலவிடங்களில் வயதில் பெரியவர்கள் வயது குறைந்தவர்களையும், தொழில் நிலைகளில் உயர்நிலையில் இருப்போர் மக்களையும் பேசும் இடங்கள் உள்ளன. சிலநேரங்களில் இருவருக்கு இடையில் ஏற்படும் கருத்து முரண்பாட்டின் போது கோபத்தின் வெளிப்பாடாக மரியாதையை குறைத்து; “நீர்”, “உமது”, “உமக்கு” எனச் சுட்டுப்பெயர்கள் வடிவிலும், “இரும்”, “வாரும்”, “சொல்லும்” என வினைச் சொற்கள் வடிவிலும் பேச்சு வெளிப்படும் இடங்களும் உள்ளன.
மரியாதை மிகு பேச்சு வகை இடைநிலை பேச்சு வகை சாதாரண நிலை பேச்சு வகை மரியாதை அற்ற பேச்சு வகை
வாருங்கள்/வாங்கோ வாரும் வா வாடா
சொல்லுங்கள்/சொல்லுங்கோ சொல்லும் சொல் சொல்லடா
கேளுங்கள்/கேளுங்கோ கேளும் கேள் கேளடா
கதையுங்கள்/கதையுங்கோ கதையும் கதை (சொல்) கதையடா
என்ன சொன்ன நீங்கள்? என்ன சொன்னீர்? என்ன சொன்ன நீ? என்னடா சொன்ன நீ?

jaffna 8

சில சுட்டுப்பெயர் சொற்களும் மூன்று வகையான பேச்சு வழக்கைக் கொண்டுள்ளன.
மரியாதை மிகு பேச்சு வகை இடைநிலை பேச்சு வகை சாதாரண நிலை பேச்சு வகை
நீங்கள் நீர் நீ
உங்கள் உமது உன்
உங்களுக்கு உமக்கு உனக்கு
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்ச் சொற்கள்
உறவுமுறைச் சொற்கள்

jaffna9யாழ்ப்பாணத்துப் பேச்சுத்தமிழில் புழங்கும் சொற்கள் பல தமிழகத்துச் சொற் பயன்பாடுகளிலிருந்து வேறுபட்டவையாக உள்ளன. பல அன்றாடப் பயன்பாட்டுச் சொற்களும் இவற்றுள் அடக்கம். ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை முறைகளையும், பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகக் கூறப்படும் உறவுமுறைச் சொற்கள் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் எப்படி அமைகின்றன என்பதைப் பார்க்கலாம்.

jaffna5எழுத்துத் தமிழில் கணவன், மனைவி என்ற சொற்களுக்கு ஈடாக, யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் புருசன், பெண்சாதி என்ற சொற்கள் பயன்படுகின்றன. 1707 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட தேசவழமைச் சட்டத்திலும் இச்சொற்களே கையாளப்பட்டுள்ளன.[1]

jaffna5பெற்றோரையும் பிள்ளைகளையும் கொண்ட தனிக் குடும்பம் ஒன்றில் உள்ள உறவுகள், தாய், தந்தை, ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள் என்பவர்களாகும். இவர்களை அழைக்கப் பயன்படும் விளிச் சொற்களும், அவர்கள் பற்றிப் பிறருடன் பேசும்போது பயன்படுத்தும் குறிப்புச் சொற்களும் ஒரு பேச்சு மொழியின் அடிப்படையான சொற்களாகும்.

jaffna5தற்காலத்தில் யாழ்ப்பாணத்துப் பிள்ளைகள் தந்தையை அப்பா என்றும், தாயை அம்மா என்றும் அழைக்கிறார்கள். இன்று வாழும் மூத்த தலைமுறையினரில் பலர், இவர்களை முறையே, அப்பு, ஆச்சி என அழைத்தனர். இடைக் காலத்தில் தந்தையை ஐயா என்று அழைக்கும் வழக்கமும் இருந்தது. அக்காலத்தில், பெற்றோரின் பெற்றோரை, பெத்தப்பு, பெத்தாச்சி, அம்மாச்சி, அப்பாச்சி, ஆச்சி என்றார்கள். இன்று அவர்கள் அம்மம்மா, அப்பம்மா, அம்மப்பா, அப்பப்பா, (சில வீடுகளில் தாத்தா, பாட்டி எனவும்) என அழைக்கப்படுகிறார்கள். இதுபோலவே பெற்றோரின் உடன் பிறந்த ஒத்தபாலாரும், சில பத்தாண்டுகளுக்கு முன்வரை, பெரியப்பு, சின்னப்பு, பெரியாச்சி, சின்னாச்சி, குஞ்சையா, குஞ்சம்மா என்றும் பின்னர் பெரியையா, சின்னையா என்றும் அழைக்கப்பட்டு, இன்று, பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா அல்லது சித்தி என்ற உறவுப்பெயரிட்டு அழைக்கப்படுகிறார்கள்.

jaffna5பால் வேறுபாடின்றிப் பிள்ளைகளைக் குறிக்கும்போது, பிள்ளை என்ற சொல்லே பயன்படுகின்றது. ஆண்பிள்ளையை ஆம்பிளைப் பிள்ளை என்றும், பெண்பிள்ளையைப் பொம்பிளைப் பிள்ளை என்றும் குறிப்பிடுவது அங்குள்ள பேச்சுத்தமிழ் வழக்கு. ஆம்பிளை என்பது ஆண்பிள்ளை என்பதன் திரிபு. அதுபோலவே பொம்பிளை என்பது பெண்பிள்ளை என்பதன் திரிபு. எனினும் தற்காலத்தில் ஆம்பிளை என்பதும், பொம்பிளை என்பதும், ஆண், பெண் என்ற பொருளிலேயே பயன்படுத்தப்பட்டு வருவதால், பிள்ளைகளைக் குறிக்கும் போது, இன்னொரு பிள்ளை என்ற சொல்லையும் சேர்க்கவேண்டி ஏற்பட்டது. உறவுச் சொற்களாக வழங்கும்போது, ஆண்பிள்ளையை, மகன் என்றும் பெண்பிள்ளையை மகள் என்றுமே வழங்குவர். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில், இச்சொற்களை விளிச்சொற்களாகவும் பயன்படுத்தி வந்தாலும்,சில குடும்பங்களில், ஆண்பிள்ளையைத் தம்பி என்றும், பெண்பிள்ளையைப் தங்கச்சி, அல்லது பிள்ளை என்றும் அழைப்பது வழக்கம்.

jaffna5பிள்ளைகள் தங்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளும் உறவு முறைச் சொற்கள் அண்ணன், அக்கா, தம்பி, தங்கச்சி என்பனவாகும். மேற்சொன்ன உறவுகள் ஒன்றுக்கு மேற்பட இருக்கும்போது, பெரிய, சின்ன, இளைய, ஆசை, சீனி போன்றவற்றில் பொருத்தமான ஒரு அடைமொழியைச் சேர்த்து, பெரியண்ணன், ஆசைத்தம்பி, சின்னக்கா என்றோ, அவர்களுடைய பெயரைச் சேர்த்து, சிவா அண்ணா, வாணியக்கா என்றோ வேறுபடுத்தி அழைப்பது வழக்கம்.

jaffna4

தந்தையின் உடன் பிறந்தாளை, அத்தை என்று அழைக்கும் வழக்கம் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவு. தந்தையோடு பிறந்த பெண்களையும், தாயோடு பிறந்த ஆண்களின் மனைவியரையும், மாமி என்றே அழைப்பது இவ்வூர் வழக்கம். எனினும், பழைய தலைமுறையினர், தாயோடு பிறந்த ஆணை அம்மான் என்றும், தந்தையுடன் பிறந்த பெண்ணின் கணவரை மாமா என்றும் குறிப்பிட்டனர். இன்று அம்மான் என்ற சொல் கைவிடப்பட்டு, மாமா என்பதே இரு உறவுக்கும் பயன்படுகின்றது.

jaffna4

மனைவி கணவனை ‘இஞ்சாருங்கோ’, அல்லது ‘இஞ்சாருங்கோப்பா’  ‘என்னங்க ‘என்றும், கணவன்  ‘இஞ்சாருமப்பா’ என்றுமோ அழைத்து வருகின்றனர் .

அக்காவின் கணவரை அத்தான் அல்லது மைத்துனர் என்றும், தங்கையின் கணவரை மச்சான் என்றும், அண்ணாவின் அல்லது தம்பியின் மனைவியை மச்சாள் என்றும் அழைத்தனர். அண்ணி என்ற சொல் மிக அரிதாகவே யாழ்ப்பாணத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தது. மேலும் மாமா, மாமியின் மகனை மச்சான் என்றும், அவர்களின் மகளை மச்சாள் என்றும் அழைக்கும் வழக்கமும் இருந்து வந்தது.
யாழ்ப்பாணத்துக்குச் சிறப்பான சொற்கள்

jaffna 7யாழ்ப்பாணத்துப் பேச்சு வழக்கில் பயன்படுகின்ற சொற்கள் பல அப்பகுதிக்கேயுரிய சிறப்பான பயன்பாடுகளாக அமைகின்றன. இவ்வாறான சொற்களில் சிலவற்றைக் கீழே காணலாம்.
பெயர்ச் சொற்கள்
பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆம்பிளை (ஆண்) இளந்தாரி (இளைஞன்) ஒழுங்கை (ஒடுங்கிய தெரு)
கதிரை (நாற்காலி) கமம் (விவசாயம்/வயல்) கமக்காரன் (விவசாயி)
காசு (பணம்) காணி (நிலம்) கொடி (பட்டம்)
சடங்கு (விவாகம்) திகதி (தேதி) பலசரக்கு (மளிகை)
பெட்டை (சிறுமி) பெடியன் (சிறுவன்) பேந்து/பிறகு (பின்பு)
பொம்பிளை (பெண்) முடக்கு (பாதைத் திருப்பம்) வளவு (வீட்டு நிலம்)
வெள்ளாமை (வேளாண்மை) – –
வினைச் சொற்கள்
பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்)
கதை (பேசு) பறை (பேசு) பாவி (பயன்படுத்து)
பேசு (ஏசு) விளங்கு (புரிந்துகொள்) வெளிக்கிடு (புறப்படு/உடை அணிந்து தயாராகு)
வினையெச்சங்கள்
பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்) பேச்சுத் தமிழ் (பொருள்)
ஆறுதலா (மெதுவாக) கெதியா (விரைவாக) –
பிறமொழிச் செல்வாக்கு

போத்துக்கேய மொழிச் செல்வாக்கு

jaffna4யாழ்ப்பாணம், 1591 ஆம் ஆண்டிலிருந்து, 1620 வரை போத்துக்கீசரின் செல்வாக்கின் கீழும், 1620 தொடக்கம் 1658 வரை அவர்களின் நேரடி ஆட்சியிலும் இருந்தது. யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொண்ட முதல் மேல் நாட்டவர் இவர்களே ஆனதால், பல மேல் நாட்டுப் பொருட்களும், கருத்துருக்களும் யாழ்ப்பாணத்தில் அறிமுகமானது இவர்கள் மூலமேயாகும். இவற்றுடன் போத்துக்கீச மொழிச் சொற்கள் சிலவும் யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் கலந்துள்ளன. தமிழ் நாட்டில் போத்துக்கீசர் செல்வாக்கு மிகவும் குறைவாகவே இருந்தனால், யாழ்ப்பாணத்தைப்போல், தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் போத்துக்கீச மொழிச் சொற்கள் அதிகம் ஊடுருவவில்லை.
பேச்சுத் தமிழ் பொருள் போத்துக்கீச மூலம்
அலுமாரி cupboard armário
அன்னாசி Pineapple ananás
ஆசுப்பத்திரி மருத்துவமனை hospital
கடுதாசி கடிதம் carta
கதிரை நாற்காலி) cadeira
குசினி அடுக்களை cozinha
கோப்பை கிண்ணம் copo
சப்பாத்து காலணி sapato
தாச்சி இரும்புச் சட்டி tacho
துவாய் துவாலை toalha
நத்தார் நத்தார் Natal
தோம்பு நில உரிமைப் பட்டியல் tombo
பாண் ரொட்டி pão
பீங்கான் செராமிக் தட்டு palangana
பீப்பா மரத்தாழி pipa
பேனை பேனா pena
வாங்கு bench banco
விசுக்கோத்து Biscuit biscoito
விறாந்தை Verandah varanda

டச்சு மொழிச் செல்வாக்கு

jaffna4ஒல்லாந்தர் 138 ஆண்டுகள் யாழ்ப்பாணத்தை முழுமையாக ஆண்டபோதிலும், போத்துக்கீசக் சொற்களைப் போல், டச்சு மொழிச் சொற்கள் யாழ்ப்பாணத் தமிழில் அதிகம் இடம் பெறவில்லை. எனினும், சில டச்சுச் சொற்கள் இன்னும் இங்கே புழக்கத்தில் இருந்துதான் வருகின்றன. கக்கூசு (கழிப்பறை), கந்தோர் (அலுவலகம்), காமரா அல்லது காம்பறா (அறை), தேத்தண்ணி (தேநீர்) போன்ற சொற்கள் டச்சு மொழியிலிருந்து வந்தவையாகும்.
ஆங்கில மொழிச் செல்வாக்கு

jaffna4ஆங்கிலேயர் யாழ்ப்பாணத்தை 150 ஆண்டுகளுக்கு மேல் நேரடியாக ஆட்சி செய்தனர். பரந்த ஆங்கிலக் கல்வி வாய்ப்புக்களை அளித்ததன் மூலம் யாழ்ப்பாணச் சமுதாயத்தில் ஆங்கிலம் நிலையான ஒரு இடத்தைப் பெற வழி வகுக்கத்தனர். விடுதலைக்குப் பின்னரும், மேலைத்தேசப் பண்பாட்டுச் செல்வாக்கும், உலகமயமாதலும், ஆங்கிலத்தின் செல்வாக்கை யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி உலகம் முழுவதிலும் நிரந்தரமாக்கியுள்ளது.

jaffna4jaffna4

வேறு மொழிச் சொற்கள்

முன் சொல்லப்பட்டவர்கள் தவிர்ந்த பிற வெளி நாட்டாருக்கு யாழ்ப்பாணத்துடன் நேரடித் தொடர்பு கிடையாது.

jaffna4

jaffna4jaffna4jaffna4

பிற சொற்கள்

இங்கே – இங்கை,இன்ச
உண்மையானவரே – மெய்ய
அங்கே – அங்கை
முடிந்தது – போச்சு
போதும் – காணும், பத்தும்
போதாது – காணாது,பத்தாது
பாருங்கள் – பாருங்கோ.

jaffna 7jaffna5

முற்றும்.

 1. 4:00 பிப இல் 2015/01/14

  யாழ்ப்பாணத்துக்கே ஒரு முறை சென்று சுற்றி பார்த்து , அங்குள்ளவர்களுடன் தமிழில் உரையாடி , அங்கு சமைக்கப்படும் உணவு வகைகளை உண்டு பார்த்து விட்டு வந்ததை போன்றதொரு திருப்தி பிரபு சார்!

  Liked by 1 person

  • 11:20 முப இல் 2015/01/15

   உங்கள் திருப்தியே இந்தப் பதிவின் வெற்றியாக கருதுகின்றேன்.உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி மஹா மேடம்.உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகள் பொங்க இந்தப் புனித நாளில் வாழ்த்துகின்றேன்.

   உங்கள் வருகைக்கும்
   கருத்துக்கும்
   நன்றி மஹா மேடம்.

   Liked by 1 person

 2. 2:46 முப இல் 2015/04/26

  மிகப் பெரிய முயற்சி..
  .இப்படி ஆவணமாகக் கொடுத்தது நன்று.
  நன்றி.

  Liked by 1 person

 1. No trackbacks yet.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: