தொகுப்பு
பாடசாலை (சிறுகதை)
{கடற்கரை சேரி வீடொன்றில் கணவன் இல்லாமல் மீன் தொழில் செய்யும் தாயும் அவளது மகன் மாறனும் வாழ்ந்துவருகிறனர்}
அம்மா நானும் எல்லோரையும் போல பாடசாலைக்கு போக வேண்டும்.
முடியாது மாறன்,.உன்னை பாடசாலையில் சேர்க்க மாட்டார்கள்.
ஏனம்மா இப்படிச் சொல்லுறீங்கள்.எல்லோரும் போகிறார்கள். நான் மட்டும் ஏன் போக முடியாது?
உன்னிடம் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை மகன். ஆகையால் பிறந்த தினம் இல்லை.எனக்கு தெரிந்து உனக்கு வயது எட்டு ஆகின்றது. பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் உன்னை பாடசாலையில் சேர்க்க மாட்டார்கள்.
நான் பாடசாலை போக வேண்டும்.என்னை எப்படியாவது பாடசாலையில் சேர்த்து விடுங்கள்.
( ஒரு வாரத்தின் பின் தாய் மகனை பாடசாலையில் சேர்ப்பதற்காக அழைத்துச் செல்கின்றார்.பாடசாலையில் காலைக் கூட்டம் நடந்து கொண்டிருக்கின்றது.அதிபர் தனது பேச்சை முடித்துக் கொண்டு ஒரு மாணவனை பேச வருமாறு அழைக்கிறார்.எவரும் பேச முன் வரவில்லை.அடுத்த வாரம் தயார்ப்படுத்தி வருமாறு கூறி காலைக்கூட்டத்தை முடிக்கிறார்)
அதிபர் ஐயா!எனது மகனை பாடசாலையில் சேர்க்க வேண்டும்.
“பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாமல் உங்களது மகனை பாடசாலையில் சேர்க்க முடியாது அம்மா” பாடசாலை அதிபர் பதில் சொல்கிறார்.
அதிபர் ஐயா! எனது மகன் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான்.எப்படியாவது சேர்த்துக் கொள்ளுங்கள்.
என்னம்மா கதைக் கிறீங்கள்.பிறந்த திகதி தெரியாது.அப்பா யார் என்று தெரியாது.உங்கள் மகன் படித்து என்ன பண்ணப் போகின்றான்? இங்கே இவனுக்கு அனுமதி கிடையாது.நீங்கள் செல்லலாம்.
(சோகத்துடன் தாயும் மகனும் சேரிக்கு செல்கின்றனர்)
எனது அப்பா யார் அம்மா? மகன் மாறன் தாயிடம் ஆதங்கத்துடன் கேட்கின்றான்.
“இந்தக் கேள்வியைக் கேட்டு என்னைக் கொல்லாதே மகன். உனக்கு அம்மா, அப்பா எல்லாம் நான் தான் மாறன்” இவ்வாறு பதிலளிக்கிறார் தாய்.
(அடுத்த வாரம் பாடசாலையில் காலைக் கூட்டம் நடை பெறுகின்றது.மாறன் அந்தக் கூட்டத்தை பார்க்கும் ஆவலுடனும் எப்படியாவது பாடசாலையில் சேரும் தாகத்துடனும் இரவல் வாங்கிய பாடசாலை சீருடையில் செல்கிறான்)
“யாராவது பேச வாருங்கள்” அதிபர் அழைக்கிறார்.
“அதிபர் ஐயா! நான் பேசலாமா?” எவரும் முன் வராத நிலையில் மாறன் கேட்கிறான்.
‘நீ யாரப்பா?! உன்னைத் தான் பாடசாலையில் சேர முடியாது என்று கூறி விட்டேனே! பிறகு ஏன் வந்திருக்கின்றாய்?”
பாடசாலை அதிபர் கேட்கிறார்.
அதிபர் ஐயா!எனக்கும் ஒரு சந்தர்ப்பம் அளியுங்கள்.என்னிடம் திறமை இருக்கிறது.
“முடியாதப்பா! நீ செல்லலாம்”அதிபர் கூறுகின்றார்.
(அதிபரின் உத்தரவை மீறி பாடசாலைக் கூட்ட மேடையில் பேசுவதற்காக ஏறுகிறான்)
எனக்கு பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லை.ஆகையால் பிறந்த தினம் இல்லை.எனது அம்மா கூறுகின்றபடி எனது வயது எட்டு. எனக்கு பாடசாலையில் படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. ஆனால் எனக்கு பாடசாலையொன்று இல்லை. ஆனாலும் நான் அறிந்துள்ள விடயங்களை எனது வயதுற்ற பாடசாலை செல்லும் மாணவர்கள் அறிவார்களா என்று சொல்லத் தெரியாது. பசியைப்பற்றிய கதையொன்றை அதிபர் ஐயாவுக்கு சொல்லிக் கொடுக்க முடியும்.ஆகையால் மரத்தின் மேல் இருந்து கொண்டு கீச்சிடும் குருவியின் சத்தம் என எனது பேச்சை எண்ணி விடாதீர்கள்.எனது அப்பா யார் என்று எனக்குத் தெரியாது .அப்பா இல்லாத, அவர் யார் என்று தெரியாத வலியை சொல்ல முடியும். வீதியில் செல்லும் மனிதர்கள் கேலி செய்யும் போது எனக்கு இப்போது வெட்கம் வருவது இல்லை.
(இவனது பேச்சைக் கேட்ட மாணவர்கள் கை தட்டுகிறார்கள். அதிபர் குறுக்கிடுகிறார்)
உனக்குத் தான் அனுமதி கிடையாது என்று கூறி விட்டேனே. பிறகு ஏன் மேடையில் ஏறி பேசுகின்றாய்.
அதிபர் ஐயா! பூமியில் கிணறொன்றை தோண்டி உள்ளே இறங்கினால் தெரிவது கிணற்றின் சுவர் மட்டுமே.ஆகாயம் என்பது கிணற்றின் வாயிலுக்கு வெளியே தெரியும் நீலவண்ண படலமாகும்.ஆகையால் கிணற்றுக்குள் இருந்து சத்தமிடுவதை விட இவ்வாறான உயரமான இடத்தில இருந்து பேசுவதற்கு எனக்கு விருப்பம்.
“உனக்காக பாடசாலை சட்ட திட்டங்களை மாற்ற முடியாது.நீ வெளியேறலாம்” அதிபர் உத்தரவிடுகிறார்.
“அதிபர் ஐயா! எனக்கு படிக்க வேண்டும் என்ற தாகம் இருக்கிறது. நான் பெரிய ஆளாக வர வேண்டும்.என் அம்மா படும் கஷ்டத்துக்கு முடிவு கட்ட வேண்டும்” மாறன் கெஞ்சுகிறான்.
“நீ செல்லலாம்” அதிபர் தடாலடியாக பதிலளிக்கிறார்.
பாடசாலை வாய்ப்புக் கிடைக்காத சோகத்தில் தனது சேரி அமைந்துள்ள கடற்கரைக்கு வருகிறான்.கடற்கரையை அழுத படி பார்த்துக்கொண்டு இருக்கிறான்.
கடல் அலைகள் அவனது காலை தொட்டுச் செல்கின்றன. அவனது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிகின்றது.
“பாடசாலை என்பது கல்வி கற்றுக் கொடுக்கு இடமா? அல்லது பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் என்னும் ஒற்றைக் கடதாசியை பரிசீலிக்கும் இடமா? பாடசாலைகளில் ஏன் திறமையைப் பார்ப்பதில்லை? திறமை இருந்தும் படிக்க ஆர்வம் இருந்தும் பாடசாலைகளில் சேர முடியாத மாணவர்கள் எத்தனை பேர்? சேரிப் புறத்தில் பிறந்த மாணவர்களை மட்டும் சட்டம் ஏன் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்கிறது? அப்பா என்பவர் யார்? ” இப்படி ஆர்ப்பரிக்கும் கடலலை யிடம் கேள்விகளைக் கேட்டு கடலலையிடமே சங்கமித்தது அவனது கண்ணீர்.
“இவனது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது?இவனது நடத்தைகளில் இனி என்ன மாற்றம் ஏற்படப் போகின்றது? இவனால் சமூகம் சந்திக்கும் பின்விளைவுகள் என்ன ?காலம் இனி பதில் சொல்லும்” இவ்வாறு, சங்கமித்த அவனது கண்ணீரிடம் ஆர்ப்பரித்தன கடலலைகள்.
****************************************************************
தேய்பிறை (சிறுகதை)
வெண்மதி அங்கே என்ன செய்யுறாய்?இங்கே வா.உன்னிடம் கொஞ்சம் கதைக்கோணும்.
என்னம்மா!என்ன கதைக்கப்போறீங்கள்?
இல்லை வெண்மதி!உனக்கும் கல்யாண வயசு வந்திட்டு.அதான் உனக்கு கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்கிறன்
ஏனம்மா இப்ப!இப்ப தான் அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது.கொஞ்ச நாள் போகட்டுமே!
இல்லை வெண்மதி!அப்படிச்சொல்லாதே.அப்பா எப்பவும் உண்ட கல்யாணத்தை பற்றியே பேசுவார்.உண்ட கல்யாணத்தை பார்க்க கூட அவருக்கு கொடுத்து வைக்கேல.நல்ல சம்பந்தம் ஒன்று தேடி வந்திருக்கு.அத தவறவிடக்கூடாது.
சரியம்மா!இனி உங்க விருப்பப்படியே நடக்கட்டும்.
(ஒரு வாரத்திற்கு பின்)
வெண்மதி ,எல்லாமே நல்லா நடக்குது.பையன் கனடாவில் இருக்கு.உண்ட படத்தை பையன்ட அம்மாட்ட கொடுத்திட்டன்.இனி எல்லாமே நல்லா நடக்கும்.
சந்தோசமா இருக்கு அம்மா!ஆனா உங்கள பிரிஞ்சு போறதா நினைச்சாத்தான் கவலையா இருக்கு.
(தொலைபேசி சிணுங்குகின்றது.வெண்மதியின்அம்மா சரஸ்வதி தொலைபேசியை தூக்குகின்றார்.மறுமுனையில் அழைப்பை ஏற்படுத்தியவர் பையனின் அம்மா பாக்கியம்)
வணக்கம் யார் பேசுறது!
நான் தான் பாக்கியம் பேசுறேன்!
“சம்பந்தி சொல்லுங்க சம்பந்தி!” வெண்மதியின் அம்மா ஆவலுடன் கேட்கின்றார்.
அப்படிச்சொல்ல முடியாதுங்க சரஸ்வதி !
என்னங்க சொல்லுறீங்கள்!
ஆமாம் சரஸ்வதி!என்ட பையனுக்கு உங்கட பொண்ணுண்ட படத்தை அனுப்பினான்.பிடிக்கேலை என்று சொல்லிட்டான்.
ஏன்!என்னாச்சு !
அவன் உங்கட பொண்ணுண்ட படத்தை பார்த்திருக்கிறான்.பொண்ணு கறுப்பா இருக்கிறாவாம்.வேண்டாமாம்.
“கறுப்பு என்றால் என்னங்க!” வெண்மதியின் அம்மா கேட்கின்றார்.
அவன் தன்ட மனைவி வெள்ளையா இருக்கோணுமாம்.அப்பத்தான் நண்பர்களிடம் தன் மனைவி என்று பெருமையா சொல்ல முடியுமாம்.மனைவி கறுப்பா இருந்தால் யாரும் மதிக்க மாட்டாங்களாம்.
(தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்படுகின்றது)
“என்னம்மா ஆச்சு.தொலைபேசியில் கதைத்ததில் இருந்தே எதையோ பறி கொடுத்த மாதிரி இருக்கிறீங்கள்” வெண்மதி கேட்கின்றாள்.
என்னதையம்மா வெண்மதி சொல்லுறது.அந்தப்பையனுக்கு உன்னைப்பிடிக்கேலையாம்.
“ஏனம்மா! என்ன பிரச்சனை?” வெண்மதி ஆச்சரியத்துடன் கேட்கின்றாள்.
அதவிடம்மா வெண்மதி.எல்லாமே தலைவிதிப்படி தான் நடக்கும்.
“சொல்லுங்கம்மா என்ன பிரச்சனை?” வெண்மதி கேட்கின்றாள்.
நீ கறுப்பா இருக்கிறாயாம்.பொண்ணு வெள்ளையா வேணுமாம்.
“அம்மா,எப்படி அம்மா எனக்கு வெண்மதி என்று பெயர் வைத்தீங்க?வெண்மதி அழகான பெயர் தான்.ஆனால் அது எனக்கு கொஞ்சமும் பொருந்தாத பெயர்”மனதுக்குள் புளுங்கிகொண்டே அவ்விடத்தை விட்டு நகருகின்றாள்.
இரவில் நித்திரையில் மனம் அழுதது.மெதுவாக அவள் துயில் கலையாது யன்னலருகில் நின்று வானத்தை வெறித்துப் பார்த்தாள்.பால் நிலா மூன்றாம் பிறையாய்த் தெரிந்தது.
“திருமணம் என்றால் என்ன?பெண் அழகாக இருப்பதா?அல்லது வெறுமனே அழகை பார்த்தே பொருத்தமானவரை தேர்ந்தெடுப்பதா? அழகைப் பார்க்கும் ஆடவர் ஏன் தங்களது தோற்றத்தை நினைத்துப் பார்ப்பதில்லை” இவ்வாறு மனதுக்குள் ஓராயிரம் கேள்விகள் கேட்கின்றாள்.
வெளியே நிலவு தேய்ந்தது.ஏய் நிலவே!இங்கே இந்த வெண்மதியும் தான் தேய்ந்து போய்விட்டாள்.
தெய்வக் குற்றம் (சிறுகதை )
{சம்பவ இடம் : கோயில்}
[கோயிலின் முகப்பில் உள்ள பலகையில் எழுதி இருக்கும் வாசகம். “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்”]
டேய் தூயவன், கடவுளைக்கும்பிடுறத விட்டிட்டு ஏன்டா அந்த ஏழைத்தாயை பார்க்கிறாய்.
பாருடா அருள், அந்தகொடுமையை! கிழிந்த ஆடை, தலைவிரி கோலம்,கையில் பிஞ்சுக்குழந்தையுடன் அந்த ஏழைத்தாய் படும் பாட்டை.
டேய் தூயவன்,அதற்கென்னடா நாங்கள் செய்யுறது!?
இல்லையடா அருள், சாப்பிட எதுவுமில்லாமல் அந்த பிஞ்சுக்குழந்தை தாயின் கையை சூப்பிக்கொண்டிருக்கு.
டேய் தூயவன்,அது கடவுள் விட்ட வழிடா.இதையெல்லாம் நினைத்து மனதை குழப்பாதையடா.
அருள்,என்னடா சொல்லுகிறாய்.அங்கே பார் கடவுளை! நெய்,தேன்,பால்,பஞ்சாமிர்தம் என குடம் குடமாய் கடவுளை கழுவுகிறார்கள்.ஏன்டா!அதை அந்த ஏழைத்தாய்க்கு கொடுக்கக்கூடாது!?
டேய் தூயவன், அவ்வாறு சொல்லாதே!தெய்வக் குற்றம் ஆகிவிடும்.
போடா அருள்!போய் வேலையைப்பாரு.இவாறான மூடநம்பிக்கை சடங்குகளை தெய்வக் குற்றம் என்று கூறாதே.
அங்கே பார்! நெய்,தேன்,பால்,பஞ்சாமிர்தம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வெளியேறுகின்றது.
(எல்லோரும் தீர்த்தத்திற்கு அலை மோதுகிறார்கள்.அந்த ஏழைத்தாய் தீர்த்தத்தை நுகரச்செல்கின்றாள்.)
“ஏய்! ஓடு, ஓடு…நீ தொட்டால் தீர்த்தம் அசுத்தமாகிவிடும்” தர்ம கர்த்தா விரட்டி அடிக்கிறார்.
“ஐயா!கொஞ்சம் கருணை காட்டுங்க” கெஞ்சுகிறாள் ஏழைத்தாய்.
“சொல்லிக்கொண்டு இருக்கிறன் .ஓடு, ஓடு..”கோபத்துடன் தர்ம கர்த்தா விரட்டுகிறார்.
டேய் அருள்,பார்த்தியா இதை.இதுதான்டா தெய்வக் குற்றம்.
வாடா தூயவன்,எல்லோரும் புறப்படுகிறார்கள்.நாங்களும் புறப்படுவோம்.
இப்போது கோயிலில் யாரும் இல்லை.தீர்த்தத்தை நுகர்ந்து கொண்டிருக்கும் நாய்களைத்தவிர!
நண்பன் (சிறுகதை)
“டேய் கதிர், ஏன் எதையோ இழந்த மாதிரி இருக்கிறாய்” “இல்லையடா அறிவு,நான் உதைபந்தாட்ட அணியில் சேரப்போகிறேன்.அதற்கு அம்மாவிடம் உதைபந்து வாங்க காசு கேட்டனான்.அம்மா வீட்டில கஷ்டம்,காசு இல்லை என்று சொல்லிட்டா.அதான் என்ன செய்வது என்றே தெரியவில்லை.”
டேய் கதிர், இதற்கெல்லாம் கவலைப்படாதே.உதைபந்து இல்லாம சேர முடியாதாடா.”இல்லை அறிவு, சேர விடமாட்டாங்கள் உதைபந்து அவசியம் தேவை.”
“அப்ப என்னடா செய்யப்போகிறாய் கதிர்” “டேய் அறிவு என்ன பண்ணுவது என்றே தெரியலைடா.என்னுடைய கனவே கலைந்து விட்டது.பிறந்தாலும் ஏழையாய் பிறக்கக்கூடாது அறிவு.”
சரி வா கதிர், நேரமாகிவிட்டது வீட்டுக்கு கிளம்புவோம்.சரி அறிவு,இன்னொரு நாளில் சந்திப்போம்.
(ஒரு வாரத்தின் பின்)
டேய் அறிவு, என்னடா உதைபந்தோட வாறாய்.புதுசா வாங்கினாயா?ஆமாம் கதிர்,இந்தா உனக்குத்தான் இதை வாங்கினான்.
டேய் அறிவு, என்னடா சொல்லுகிறாய்.
ஆமாம் கதிர், நீ உதைபந்தாட்ட அணியில் சேரவேண்டும்.உனது கனவு நிறைவேற வேண்டும்.அதுதான் உனக்காக வாங்கிக் கொண்டு வந்தனான்.
டேய் அறிவு,எங்காலயடா காசு உனக்கு?அதை விடு கதிர்,நீ போய் பாடசாலை அணியில் சேர்.டேய் அறிவு, நான் கேட்கிறேன் எங்கால உனக்கு காசு என்று?
இல்லை கதிர்,அம்மா என் பிறந்த நாளுக்கு உடுப்பு வாங்க காசு தந்தவா.அத வச்சுத்தான் உனக்கு உதைபந்து வாங்கித்தந்தனான்.
டேய் அறிவு, என்ன காரியம் பண்ணினாய்.எனக்காக நீ…அறிவு…எனக்கு அழுகை தாண்ட வருது.
டேய் கதிர்,அழுதது போதும் விடுடா.
டேய் அறிவு,நான் ஏழை இல்லையடா,எவன் ஒருவனுக்கு உன்னை மாதிரி நல்ல நண்பன் இல்லையோ!அவன் தான்டா ஏழை!
உண்மைக்காதலர்கள் (சிறுகதை)
பூவரசனும் யாழினியும் இணைபிரியாக்காதலர்கள்.ஒருவரை ஒருவர் மனதாரக்காதலித்து வருகின்றனர்.
நாட்கள் நகர்கின்றன.திடீரென இவர்கள் காதலிலும் பூகம்பம் வெடிக்கின்றது.அது யாழினி மூலம் நடக்கின்றது. பூவரசனை சந்திக்கும் யாழினி நான் உங்களை விரும்பவில்லை என்றும் நண்பியாகத்தான் உங்களிடம் பழகி வந்தேன் என்றும் தெரிவிக்கின்றாள். நொறுக்கிபோகின்றான் பூவரசன்.ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றாய் என வினவுகின்றான். அதற்கு அவள் “நீங்கள் நட்பாக பழகியதை தவறாக அர்த்தம் கொள்கின்றீர்கள்.காதலுக்கும் நட்புக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லை “என்கின்றாள். நீண்ட சொற் பரிமாற்றத்துக்கு பின் தனது காதலிக்கு பிரியாவிடை அளிக்கின்றான் பூவரசன்.
நாட்கள் நகர்கின்றன.பூவரசனின் நண்பன் வேந்தன் பூவரசனிடம் ஓடி வருகின்றான்.பூவரசா விஷயம் தெரியுமா என்று கேட்கின்றான்.என்ன என்கின்றான் பூவரசன்.யாழினி புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றாள் என்கின்றான். புழுவாய்த்துடித்த பூவரசன் மருத்துவமனை விரைகின்றான்.
யாழினியை சென்று பார்க்கின்றான்.ஆறாத்துயரில் மூழ்குகின்றான். அவள் கடந்த மாதம் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டால் என்றும் இன்னும் ஒரு வருடம் தான் உயிருடன் இருப்பாள் என்றும் வைத்தியர் மூலம் அறிகின்றான் பூவரசன்.
பூவரசன் ஆழ்ந்த யோசனையில் இருக்கின்றான்.இந்த நோய் காரணமாகவே யாழினி தன்னை வெறுத்தால் என்பதை அவனது ஆறாம் அறிவு அவனுக்கு புலப்படுத்தியது. யாழினியின் நண்பி ரேவதியிடம் துளாவினான் பூவரசன்.அவளும் ஆறாம் அறிவு புலப்படுத்திய உண்மையை மெய்யாக்கினாள். அவளின் காதலின் ஆழத்தை உணர்ந்த பூவரசன் ஆனந்தக் கண்ணீர் விட்டான்.
யாழினி மருத்துவமனையிலிருந்து வீடு செல்கின்றாள். யாழினியின் பெற்றோரிடம் செல்லும் பூவரசன் தனக்கு எல்லா விடயமும் தெரியும் என்றும் தான் யாழினியை திருமணம் செய்ய விரும்புவதாகவும் தெரிவிக்கின்றான். அவன் தன மீது கொண்ட உண்மை அன்பை உணர்ந்து சம்மதிக்கின்றாள் யாழினி.
திருமணம் இனிதே நடைபெறுகின்றது.யாழினியின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர்.யாழினியின் கண்களில் மட்டுமல்ல திருமணத்துக்கு வருகை தந்த அனைவரின் கண்களிலிருந்தும் தான்.
ஏழைச்சிறுவன் (சிறுகதை)
குமரன் ஒரு ஏழைச்சிறுவன். துடுப்பாட்டத்தின் மீது தணியாத தாகம்.ஜெயசூர்யா என்றால் அவனுக்கு உயிர்.பாடசாலை துடுப்பாட்ட அணியில் சேர வண்டும் என்று பேரவா.தாயிடம் தனது விருப்பத்தை தெரிவிக்கின்றான்.
தாய் மறுக்கின்றாள்.காரணம் அணியில் சேர துடுப்பாட்ட மட்டை வேண்டும். அது வேண்ட காசு வேண்டும்.
குமரன் விடாப்பிடியாக நிற்கிறான்.திடீரென ஒரு நாள் தாய் துடுப்பாட்ட மட்டை வேண்ட காசு கொடுக்கின்றாள்.
குமரன் ஆனந்தத்தில் திளைக்கின்றான்.துடுப்பாட்ட மட்டை வாங்கி அணியிலும் சேர்ந்து கொள்கின்றான்.
வழக்கம் போல வீடு செல்கின்றான்.வீட்டின் முன்னே அயலவர்கள் கூடி நிற்கின்றார்கள்.தாய் பிணமாக கிடக்கின்றாள்.கதறுகின்றான் குமரன்.
தாயின் மரணத்துக்கான காரணத்தை தகப்பனிடம் வினவுகின்றான். அம்மாவின் நெஞ்சு வருத்தத்திற்கு வைத்தியர் தினமும் மருந்து குடிக்கச்சொன்னவர்,அம்மா குடிக்கவில்லை,அது தான் காரணம் என்று பதிலளிக்கின்றார்.
ஏன் குடிக்கவில்லை என்று கேட்கின்றான் குமரன்.மருந்து வாங்க வைத்திருந்த காசில் தான் அம்மா உனக்கு துடுப்பாட்ட மட்டை வாங்கித்தந்தவா என்கிறார்.
நான்காய் உடைந்து போகின்றான் குமரன்.தாயின் பூதவுடலை சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்கின்றனர். தாயின் உடல் தீயில் சங்கமிக்கின்றது.எல்லோரும் சுடுகாட்டை விட்டு அகல்கின்றனர். குமரன் மட்டும் அகலாமல் நிற்கிறான்.
எரிந்து கொண்டிருக்கும் தாயின் பூதவுடலுக்கு மேலே துடுப்பாட்ட மட்டையையும் போடுகின்றான்.துடுப்பாட்ட மட்டையும் எரிகின்றது.
அவனது தாயைக்கொன்ற அந்த துடுப்பாட்ட மட்டை மீது எனக்கும் தீராக்கோபம்.ஏன்!உங்களுக்கும் தான்!!!!!
கடவுளுக்கு நன்றி (சிறுகதை)
மாலினிக்கு திருமணம் முடித்து வைப்பதற்காக பெற்றோர் வரன் பார்க்கின்றனர்.நீண்ட தேடலின் பின் வெளிநாட்டு வரன் முற்றாகியது.மாப்பிள்ளை அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராக உள்ளார்.
இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டது. திருமணவிழா களைகட்டியது. மாலினி உற்சாகமாக மணவறைக்கு செல்லத்தயாராகுகின்றாள்.
மாப்பிளளையைக்காணவில்லை.எல்லோரும் அங்கலாய்க்கின்றனர். மணமகன் வரும் வழியில் வாகனம் மோதி பலியாகின்றான்.
விஷயம் அறிந்த மாலினிக்கு வாழ்க்கை இருட்டியது. அலறினாள், புரண்டாள்.
மரண வீட்டுக்கு பதறி விழிந்து அலுத்து கொண்டு தனது குடும்பத்துடன் செல்கின்றாள். பிணம் இரு நாட்களாக அஞ்சலிக்கு வைக்கப்பட்டிருக்கின்றது.
திடீரென ஒரு வாகனத்திலிருந்து கதறிக்கொண்டு ஒரு பெண்ணும் இரு சிறு பிள்ளைகளும் வருகின்றனர். ஆம்! மாப்பிளளை ஏற்கனவே மணம் முடித்தவன் என்ற விடயம் ஒப்பாரி மூலம் மாலினிக்கு விளங்கியது.
வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தாள் மாலினி.ஆம்! கடவுளுக்கு நன்றி சொல்கின்றாள் அவள்.
ஒரு குழந்தையின் காத்திருப்பு! (சிறுகதை)
கமலா ஒரு நிறைமாதக்கர்ப்பிணி.கிளிநொச்சியில் வாழ்கின்றாள்.குண்டுச்சத்தங்களால் குலுங்கிகொண்டிருக்கின்றது கிளிநொச்சி நகரம்.கமலா தனது குழந்தையின் வரவுக்காய் காத்திருக்கின்றாள்.கமலாவின் கணவன் பவித்ரன் போர் நிறுத்தப்படாதா என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான்.
உணவுத்தட்டுப்பாடு ஒருபுறம், குண்டுகள் எப்போது வந்து வெடிக்கும் என்று சொல்லமுடியாததால் பதுங்குகுழியை விட்டு வெளியே வர முடியாதது மறுபுறம்,மருத்துவமனைக்குச்செல்வதற்கு வாகனவசதி பெறுவது எப்படி என்று பலவற்றை யோசித்துக்கொண்டிருக்கிறான்.
கமலா பிரசவவலியால் அலறத்தொடங்குகிறாள். பவித்ரன் தன்னிலை மறந்து மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பதுங்குகுழியிலிருந்து வெளியே வருகின்றான்.விரைந்து வாகனம் பெற ஓடுகின்றான். தெருச்சந்திகள் எங்கும் அலைகின்றான்.எங்கும் வாகனங்கள் பெற முடியாத நிலை.குண்டுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பவித்ரன் செல்வீச்சுக்கு இலக்காகி ஸ்தலத்திலேயே மடிகின்றான்.
கமலா பிரசவவலியையும் பொருட்படுத்தாது கணவனின் வரவுக்காக காத்திருக்கின்றாள்.முடிவில் தனக்கு தானே பிரசவம் பார்த்தாள்.அழகிய ஆண் மகனை பெற்றெடுத்தாள்.தனது கணவனை காணவில்லை என்ற ஏக்கத்தில் தனது இயலாமையையும் பொருட்படுத்தாது குழந்தையை அப்படியே விட்டுவிட்டு பதுங்குகுழியை விட்டு வெளியே வருகின்றாள்.எங்கோ இருந்து வந்த செல் அவளைப்பதம் பார்க்க மரணிக்கின்றாள் அந்தக்கன்னித்தாய்.
தாயையும் இழந்து தகப்பனையும் இழந்து பதுங்குகுழிக்குள் அழுது கொண்டிருக்கும் இந்த ஆண் மகவு யாருக்காக காத்திருக்கின்றது?
குறிப்பு:என்னால் எழுதப்பட்ட முதல் சிறுகதை இதுவாகும்.
அண்மைய பின்னூட்டங்கள்