தொகுப்பு

Posts Tagged ‘கோயம்பேடு’

நான் பார்த்த சென்னை (காட்சி 7)


Chennai_
கோயம்பேடு என்ற வார்த்தையை பலரும் திரைப்படங்கள் மூலம் அறிந்திருப்போம். கோயம்பேடு சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள சென்னை புறநகர் பேருந்து நிலையம் ஆசியாவிலேயே பெரிய பேருந்து நிலையமாகும். இங்கு மிகப்பெரிய காய்கறிச் சந்தையும் உள்ளது.ஆசியாவின் மிகப்பெரும் காய்கறிச் சந்தை என்ற தனிச்சிறப்பை இன்றும் தக்க வைத்துள்ள கோயம்பேடு சந்தை சென்னையின் தனித்துவ அடையாளமாக திகழ்கின்றது.ஆனால் அதன் தனித்துவம் சென்று பார்த்தால் மட்டுமே தெரிய வரும்.
KOYEMBEDU
கோயம்பேட்டில் கோயட்டி என்ற ஒரு குருட்டு நாரை இருந்ததாம். இது தன் பக்தியால், இறக்கும்போதும் இறைநாமம்ஓதிச் சிவலோகப் பிராப்தி அடைந்ததாம்! அதனால் அந்த நாரையின் பெயரால் ‘கோயட்டிபுரம்’ என்று இந்த இடம் முதலில் அழைக்கப்பட்டு, பின் அது ‘கோட்டிபுரம்’ என்றாகி நாளடைவில் ‘கோயம்பேடு’ என மருவியதாம்.
Chennai__Bus_Terminus

KOYEMBEDU
திருமணத்திற்கு தேவையான காய்கறிகளையும் மற்றும் இதர பொருட்களை வாங்கவும் உறவினர்களுடன் பயணமானேன்.அங்கு சென்று சேர்ந்தவுடன் சற்று ஆடித் தான் போனேன்.நான் இதுவரை பார்க்காத ஒரு சந்தையை நேரில் கண்டேன்.இதுவரை நான் கண்டிராத காய்கறிகளையும்,பழங்களையும் அங்கு தான் கண்டேன்.காய்கறிகள் மிகவும் மலிவு விலையில் கிடைத்தமை ஆச்சரியம்.எனக்கு பழங்களில் மாதுளம் பழமும்,அன்ன முன்னா என்ற பழமும் மிகவும் பிடித்த பழங்கள்.யாழ்ப்பாணத்தில் ஒரு மாதுளம் பழம் குறைந்தது முன்னூறு ரூபா வரும்.ஆனால் இன்று ஐந்து ரூபாவில் கிடைக்கின்றது.நம்புங்கள் நண்பர்களே!

வழுதுணங்காய்,பிசிக்கங்காய்,சாத்தாவாரிசிறகவரை,செங்கிழங்கு,காராமணி,களாக்காய் போன்ற காய்கறிகளை கோயம்பேடு சந்தையில் முதன் முதலாக கண்டேன்.
அம்பிரலங்காய்,பஞ்சலிப்பழம்,சீமையிலுப்பை,கடார நாரந்தை, சாத்துக்கொடி, பேயத்தி, பம்பரமாசு,லன்சியம்,மண்டரின் நாரந்தை, மசுக்குட்டிப்பழம்,இளஞ்செம்புற்றுப் பழம் போன்ற பழங்களையும் கோயம்பேடு சந்தையில் தான் முதன் முதலாக கண்டேன்.இந்த சந்தையின் பிரதான வணிகம் காய்கறி என்ற போதும் பல வியாபாரமும் மும்முரமாக நடக்கின்றது.

முக்கியமான விடயத்தை கூற மறந்திட்டன்.ஓம்..அதுதான் மாலை வியாபாரம்.மாலை என்றவுடன் குழம்பிப் போய் விடாதீர்கள்.கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகிறது, இந்த மறைதல் நேரத்தை, மாலை எனலாம்.அல்லது மாலை என்னும் சிற்றிலக்கிய வகை.அல்லது முத்தாரத்தை முத்துமாலை என்பர்.அல்லது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பும், மாலை எனப்படும்.நான் கூறுவது கழுத்தில் அணியக்கூடிய மலர்களால் ஆன தொகுப்பையே கூறுகின்றேன்.
koyambedu_

தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.

தமிழரின் வாழ்க்கையில் மலர்கள் எல்லாக் காலகட்டங்களிலும் நடைபெறும் சிறப்பு நிகழ்வு களில் முதன்மையிடம் வகிக்கின்றன. குழந்தை பிறப்பு முதலாக இறப்பு வரை எல்லா நிலைகளிலும் பூக்கள் இல்லாமல் எதுவுமில்லை. தாயின் வயிற்றில் குழந்தை கருவானதும், ஏழாவது மாதம் நடை பெறும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பெண்ணின் தலையிலிருந்து தொங்கும் சடையைப் பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது. மேலும் அவளது கழுத்தில் மாலையை அணிவித்து, கைகளில் வளையல் அணி விக்கும் சடங்கு நடைபெறுகின்றது.

குழந்தை பிறந்து சில மாதங்களில் தலை முடியை மழிக்கும் சடங்கில், கழுத்தில் மலர் மாலை அணிவிப்பது முக்கியமான சடங்கு. ஒரு வயதுக் குழந்தையின் தலைமுடியைச் சின்னக் குடுமியாக்கி, அதில் பூச்சரத்தை வளையமாக வைத்தால்தான் சில தாய்மார்களுக்குத் திருப்தி. பெண் வயதுக்கு வந்தவுடன் செய்யப்படும் சடங்கு களில், தாய் மாமா அவளுக்கு மலர் மாலை சூடுகின்றார். அந்தச் சிறுமியின் தலைமுடியை நீளமான சவுரி முடியை இணைத்துப் பின்னி, அதில் தாழை மலரின் மடல்களை அழகாக வைத்துத் தைப்பதுடன், அந்த அலங்காரம் ஆள் உயரக் கண்ணாடியில் தெரியுமாறு நிழற்படம் எடுத்து வீட்டில் தொங்கவிடுவது எண்பதுகளில் கூட நிலவியது.

இளம்பெண் பருவமடைவதனைப் ‘பூப் படைதல்’ என்ற சொல்லால் குறிப்பது கிராமிய வழக்கு. பூப்புனித நீராட்டு விழா என்ற பெயரில் அழைப்பிதழ் அச்சடித்து, ஊரைக் கூட்டி விருந்து போட்டு விமரிசையாகக் கொண்டாடுவது மதுரைப் பக்கத்துக் கிராமங்களில் இன்றும் நடைபெறு கின்றது.

பெண் பார்க்கும் நிகழ்ச்சியில் ‘பூ வைத்தல்’ சடங்கு குறிப்பிடத்தக்கது. பெண் பிடித்துவிட்டது, அவளை விரைவில் மணமகளாக ஏற்றுக் கொள் கின்றோம் என்று உறுதியளிக்கும் வகையில் பையனின் தாயார், சகோதரிகள் அப்பெண்ணின் தலையில் பூவைச் சூடுவது, ஒருவகையில் ஆரவாரம் அற்றது. தங்கள் குடும்பத்திற்கு மணமகளாக வரவிருக்கும் இளம் பெண்ணின் தலையில் பூவைச் சூடுதல் மூலம் தங்களுடைய உரிமையை உறுதி செய்துகொள்வது இன்றும் வழக்கினிலுள்ளது.

திருமண நாளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மலர் மாலைகள் அணிவித்துக் கையில் பூச்செண்டுகள் தரப்படுகின்றன. மணமேடையில் உற்றார் உறவினர் முன்னிலையில், திருமணம் என்ற உறவு எங்களுக்குள் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளையும் பெண்ணும் பரஸ்பரம் மாலைகளை மூன்று தடவைகள் மாற்றிக் கொள்கின்றனர். திருமண நாளில் மணப்பெண்ணுக்குத் தலைமுடி தெரியாத அளவுக்கு பூச்சரத்தைச் சூடுவதன் மூலம், அந்தப் பெண்ணின் மனதில் குதூகலத்தை ஏற்றுகின்றனர்.

தமிழகத்தில் குடும்பப் பெண் அல்லது சுமங்கலி எனப்படுபவளின் அடையாளமாக மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவற்றுள் பூக்களும் குறிக்கப் பெறுகின்றன. பெண் தலையில் பூவைச் சூடுவதற்கும் குடும்பப் பெண்ணுக்குமான உறவு ஆய்விற்குரியது. பண்டைக் காலத்தில் இளம் பெண்கள் பூச்சூடும் வழக்கம் இல்லாமல் இருந்திருக்கவேண்டும். ஏதோ ஒரு காலகட்டத்தில் திருமணமான பெண் எனக் குறிப்பதற்குப் பூவானது குறியீடாக மாற்றப்பட்டு இருக்கலாம். இன்று நெற்றியின் உச்சி வகிட்டினில் குங்குமத்தை இட்டுக் கொள்வது, பெங்காலி, கன்னடப் பெண்களிடமிருந்து 90களுக்குப் பின்னர் தான் தமிழகத்திற்குப் பரவியுள்ளது.

கோயம்பேடு சந்தையில் பல வகைப்பட்ட மாலை வகைகள் கிடைக்கின்றன.மாலை என்றவுடன் அதன் வகைகள் பற்றியும் ஒரு சிந்தனை வரும். அதிலும் திருமண மாலைகள் விசேடமானது.சாமந்திப்பூ திருமண மாலைகள்,மந்தாரைப்பூ திருமண மாலைகள்,சம்பங்கிப்பூ திருமண மாலைகள்,ரோஜா பூவிதழ் திருமண மாலைகள்,ரோஜாப்பூ திருமண மாலைகள் என்பன அவற்றில் விசேடமானவை.அது தவிர நடிகர்கள்,நடிகைகள் தங்கள் திருமணத்தில் பயன்படுத்திய மாலைகளும் இங்கு கிடைக்கின்றன.
சாமந்திப் பூச்சரங்களின் மாலை

koyambedu_

சென்னை சென்றால்,இப்படிப் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள கோயம்பேடு சந்தையை பார்க்க மறக்காதீர்கள்.

நான் பார்த்த சென்னை (காட்சி 8) அடுத்த திங்கள் கிழமை வெளியாகும்.

பிரிவுகள்:ALL POSTS, சென்னை குறிச்சொற்கள்: